கோடை காலம் தொடங்கிய நிலையில் கடுமையான வெயில் தாக்கத்தால் நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை பெய்துவருகிறது.
தென்மாவட்டங்களில் பரவலான மழைபெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை மழை ஏதும் இல்லை. சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசையை நோக்கி புயல் உருவாக வாய்ப்புள்ளது என்றும் இந்தப் புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் புயல் உருவாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்த ஃபனி புயல் ஏப்ரல் 30ஆம் தேதி தமிழ்நாடு -ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடக்க வாய்ப்புள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.