கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக ஏராளமான தொழில் நிறுவனங்களும் ,தொழிற்சாலைகளும் தங்களது நேரத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனையடுத்து ஏராளமான வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தொடர்ந்து வேலை இழந்து வருவாய் இல்லாத காரணத்தினால் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் தென்னக ரயில்வே புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது .மேலும் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், தொழிலாளர்கள் அச்சம் கொண்டு ஒரே நேரத்தில் பயணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
தென் இந்தியாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராமேஸ்வரம், தாம்பரம் திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் தென்னக ரயில்வே 45 ரயில்கள் இயக்க உள்ளதாகவும், இதனால் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.
மேலும் விழுப்புரம் முதல் புரலியா வரை மற்றும் விழுப்புரம் முதல் கராக்பூர் வரை 2 புதிய சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: காங். எம்பி ராகுலுக்கு கரோனா!