சென்னை: கீழ்ப்பாக்கம் ரங்கநாதன் அவென்யூ பகுதியில் ஸ்வதாம்புர் முர்டிபுஜக்ட் ஜெயின் சன்க் என்ற ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில் கிம்ராஜ் சாக்கிரியா (50) என்பவர் துணை தலைவராக உள்ளார். இவரது மனைவி மீனா சர்க்காரியா தினமும் இவரது வீட்டில் இருந்து 44 சவரன் மதிப்புள்ள தங்கத்தால் ஆன தங்கதட்டு, தங்க ஊதுபத்தி நிறுத்தம், தங்க விசிறி , குவளை ஆகிய பூஜை பொருள்களை கொண்டு சென்று கோயிலில் வைத்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதேபோல இன்று (ஜூலை13) காலை தங்க பூஜை சாமான்களுடன் கோயிலுக்குச் சென்றார். பின்னர் மீனா சர்க்காரியா கோயில் கருவூலத்தின் இடது புற ஜன்னல் அருகே பூஜை சாமான்கள் கொண்டு வந்த பையை வைத்து விட்டு கருவூலத்தை சுற்றி வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர் கருவூல ஜன்னல் திட்டில் வைத்திருந்த 44 சவரன் தங்கத்தால் ஆன பூஜை சாமான்கள் மற்றும் கருவூலத்தில் இருந்த 350 கிராம் எடையுள்ள வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து மீனா அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்த விஜய்புஜாரியா என்பவர் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வேலை விட்டு நிறுத்தியதாகவும், இதனால் அவர் மீதும் சந்தேகம் இருப்பதாகவும் மீனா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி - மத்திய அரசு