சென்னை: மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பருவமழை முடியும் வரை தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்தும், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுப்பேட்டை வேலாயுதம் தெரு, மாண்டியத் பூங்கா, பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "சென்னையில் இன்று 40 இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. தண்ணீர் தேங்கிய இடங்களில், இனி வரும் காலங்களில் மோட்டார் வைக்காமல் மழைநீர் வடிய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு செய்து வருகிறோம்.
22 தொகுதிகளில், 20 தொகுதிகளில் பிரச்சனை இல்லை. திரு.வி.க நகர் மற்றும் கொளத்தூரில் மட்டுமே மழை நீர் தேங்கியது. திருப்புகழ் கமிட்டி சொல்லாத இடத்தில் தண்ணீர் நின்று விட்டது. அவர்கள் மழை நீர் தேங்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வரக்கூடிய காலங்களில் இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் தேங்கிய 90 விழுக்காடு இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிட்டது.
ஓட்டேரி கால்வாயை அகலப்படுத்துவது மிகவும் சிரமமான காரியம். ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயின் அகலத்தைச் சீர்படுத்த வேண்டும். ஓட்டேரி கால்வாயிலிருந்து வரும் தண்ணீரை தணிகாசலம் கால்வாய் வழியாக பிரித்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள். நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கி உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு போன்ற ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தடுப்புகள் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். எனவும் இருப்பினும் பெரம்பூரில் நடந்தது போன்று சம்பவங்கள் சில இடங்களில் நடந்து வருகின்றன. இனி அதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழைநீரால் காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்