சென்னை: பாரிமுனை மூக்கர் நல்லமுத்து தெரு, அர்மேனியன் தெரு சந்திப்பில் நூறு ஆண்டு கால பழைமை வாய்ந்த நான்கு மாடி கட்டடம் ஒன்று இருந்து வந்துள்ளது. இந்த கட்டடத்தை பாரிமுனையைச் சேர்ந்த ராயல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பரத் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் பழைமையான கட்டடத்தை புதுப்பிப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களாக கட்டடம் புனரமைப்புப் பணியானது நடைபெற்று வந்துள்ளது. சுமார் 15க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக கட்டடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில் வழக்கம் போல இன்று காலை 9 மணியளவில் சுமார் 8 ஊழியர்கள் கட்டிடம் புதுப்பித்தல் பணிக்காக வந்துள்ளனர்.
சரியாக 10 மணி 15 நிமிடத்தில் நான்கு மாடி கட்டிடம் முழுவதும் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பெரும் சத்தத்துடன் சரிந்து விழுந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்ததன் பேரில் ஏழுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கட்டிட இடிபாடுகளுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிக்கி இருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபிக்கள், பத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வரவழைக்கப்பட்டு இடிபாடு கற்கள் மற்றும் மணல்களை தீவிரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், நவீன இரும்பு அறுக்கும் உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு கட்டடத்தின் உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகளை அறுத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தால் அருகாமையில் இருக்கக்கூடிய வீடுகள் கடைகள் என ஐந்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன. மேலும், 4 மாடி கட்டடத்தின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என மொத்தமாக சேதம் ஆகியுள்ளன. உள்ளே எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? எனவும் உள்ளே இருக்கும் நபர்களை உயிருடன் மீட்கும் முயற்சியிலும் தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் முழு முனைப்பில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
'விக்டிம் ஐடென்டிபிகேஷன்' என்ற நவீன இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஊழியர்கள் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என்றும் டிரோன் மூலமாகவும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மோப்பநாய் பிரிவிலிருந்து லிங்கா, லியோ என்ற இரண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு அவற்றின் உதவி மூலம் யார் யார் எங்கெங்கே சிக்கி இருக்கிறார்கள்? என்பது குறித்தும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபி ஆபாஷ் குமார், காவல்துறை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, தீயணைப்புத்துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.
மீட்பு பணியை ஆய்வு செய்த பின்பு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெசிய அவர் "கட்டிடத்தின் பணியானது நடைபெற்ற போது கட்டடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து பேர் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி மெதுவாக தான் நடைபெறும். விரைவாக நடைபெற்றால் கட்டிடம் சரிந்து கீழே இருப்போருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினார். குறிப்பாக கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்வதற்கு முறையான அனுமதி மாநகராட்சியிடம் அனுமதி வாங்கவில்லை" என அவர் கூறினார்.
முழுமையான மீட்பு பணிகளுக்கு பிறகு உள்ளே எத்தனை நபர்கள் சிக்கி உள்ளனர்? எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் வாகனங்கள் சேதம் ஆகியுள்ளன? என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என காவல் துறை உயர் அதிகாரிகளும் தீயணைப்பு துறை உயர் அதிகாரிகளும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து எஸ்பிளனேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.