மத்திய அரசின் அறிவிப்பின்படி மே 25ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களைத் தவிர அனைத்து விமான நிலையங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
அதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்று 39 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
அதில் 20 விமானங்கள் சென்னையிலிருந்து டெல்லி, ஹைதராபாத், வாரணாசி, ராஜ்கோட், அகமதாபாத், அந்தமான், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களுக்குச் செல்லக்கூடியவை. அதைப்போல் 19 விமானங்கள் மேற்கூறிய நகரங்களிலிருந்து சென்னைக்கு வரக்கூடியவை.
அதில் முதல் விமானமான ஏர் இந்தியா இன்று காலை 5.10 மணிக்கு 152 பயணிகளுடன் அந்தமானுக்குப் புறப்பட்டுச் சென்றது. அதையடுத்து காலை 7.45 மணிக்கு ஏர் ஏசியா விமானம் டெல்லியிலிருந்து 64 பயணிகளுடன் சென்னை வந்தடைந்தது.
அதேபோல், மொரீசியஸிலிருந்து இந்தியர்கள் 200 பேருடன் மொரீசியஸ் விமானம் இன்று மாலை 6 மணிக்குச் சென்னை வருகிறது. அதே விமானம் நாளை (மே 27) காலை இந்தியாவில் வசிக்கும் மொரீசியஸ் நாட்டவரை ஏற்றிக்கொண்டு அவர்களின் தாயகத்திற்கு அழைத்துச் செல்கிறது.
அதையடுத்து திருச்சியிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்களும், செல்லக்கூடிய விமானங்களும் நேற்று போலவே இன்றும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அது குறித்து விமான நிலைய அலுவலர்கள், வரும் 31ஆம் தேதிவரை திருச்சி விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விமானத்தில் நடு இருக்கைகளில் பயணிகள் அமர அனுமதி!