சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேந்தவர் சுசீலா. இவர் அரசு வங்கியில் காசாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
நேற்று முன் தினம் (ஆக.24) இவர் தனது குடும்பத்தினருடன் வந்தவாசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்விற்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து, நேற்று (ஆக.25) காலை சுசிலா வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்கள் சுசீலாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டின் வாசலில் ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுசிலாவின் மகன் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகைகள், இரண்டு லட்ச ரூபாய் பணம், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் கொள்ளையடிக்கப்படிருப்பது தெரிய வந்தது. மேலும், வீட்டு வாசலில் ஐந்து ரூபாய் நோட்டுக் கட்டுகள் இறைந்து கிடந்தன.
தொடர் திருட்டு
இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சுசீலா வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் லேப்டாப், உண்டியல் ஆகியவை திருடு போய் இருந்ததும் தெரியவந்தது. அந்த வீட்டார், வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருக்கும்போது இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் ஆர்யா குரலில் இளம்பெண்களிடம் மோசடி: நடந்தது என்ன?