சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் தனியார் தொலைக்காட்சியில் கேமரா மேனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மோனித் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், நேற்று மோனித் வீட்டின் மொட்டை மாடியில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென்று மோனித் முகத்தில் மாஞ்சா நூல் சிக்கி முகம், கழுத்துப் பகுதிகளில் அறுத்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக மோனித்துக்கு பெற்றோர் முதலுதவி செய்தனர்.
இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் மோனித்தின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த நவீன் (23), விக்னேஷ் ஆகிய இரண்டு நபர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாஞ்சா நூல், பட்டத்தை அயனாவரத்தைச் சேர்ந்த சீனிவாசனிடம் (50) வாங்கியதாகக் கூறியதன் அடிப்படையில், அவரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரித்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய கோடம்பாக்கம் பிரபாகரன், லோகநாதன் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 240 காற்றாடிகள், காற்றாடி செய்யக்கூடிய மூங்கில் குச்சிகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உள்ளனர்.