சென்னை நொளம்பூர் பாரதி சாலையில் ஏஆர்டி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று (மார்ச் 28) ஏஆர்டி நகைக்கடை ஊழியர்களான ஆசிக், அந்தோணி ஆகிய இருவரும் பூக்கடை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒரு நகை கடைக்குச்சென்று 3 கிலோ தங்க நகைகளை வாங்கிக்கொண்டு, ஓலா மூலம் கார் பதிவு செய்து, அந்த காரில் அண்ணா நகருக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அண்ணா நகர் ரவுண்டானா அருகே வந்த போது நகைக்கடை ஊழியர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்த பெண் தோழியை அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது வெள்ளை நிற சொகுசு காரில் வந்த ஒரு கும்பல் காரில் மூவரையும் கடத்திச்சென்றது. பின்னர் அந்தப் பெண் தோழியை மட்டும் வாவின் அருகே இறக்கி விட்டு, நகைக் கடை ஊழியர்களை கடத்திச்சென்று தாக்கி, அவர்களிடம் இருந்த 3 கிலோ நகைகளை பறித்துக் கொண்டு நொளம்பூர் பைபாஸ் சாலையில் விட்டு விட்டு தப்பிச்சென்றது.
உடனே நகைக்கடை ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் அண்ணாநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். தொடர்ந்து, இருவரையும் மீட்ட காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். பின்னர் ஆசிக் மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக இந்த விவகாரம் தொடர்பாக நகைக்கடை ஊழியர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நொளம்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏஆர் மால் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட இந்த நிறுவன உரிமையாளர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி கேட்பதாகவும், மோசடியில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் பலரும் புகார்கள் அளித்துள்ளனர்.
குறிப்பாக ஆருத்ரா, ஹிஜாவு போன்ற நிறுவனங்கள் சிலர், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 4 வாரத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வட்டியாக தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, கடந்த 1 வாரகாலமாக பணத்தை முறையாக வழங்காமல், இழுத்தடித்தபடி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், அதே நிறுவன உரிமையாளர்களிடம் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதால் காவல் துறையினருக்கு சற்று சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் செய்த மோசடியை மறைக்க ஊழியர்களே திட்டம்போட்டு நகைக்கொள்ளையில் ஈடுபட்டு நாடகம் ஆடுகின்றனரா அல்லது உண்மையிலேயே நகைக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்து அண்ணா நகர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்.. கோவையில் பரபரப்பு!