சென்னை: நொளம்பூர் பாரதி சாலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி என்ற தங்க நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆவர். இந்நிறுவனம், தங்க நகை சேமிப்பு, தங்க நகை கடன் மற்றும் 1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.
இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இலட்சக் கணக்கில் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். மேலும், சிவகார்த்திகேயனை வைத்து பிரமாண்டமான திரைப்படம் எடுக்கப்போவதாக கூறி பொதுமக்களை நம்பவும் வைத்துள்ளனர். மேலும், முதலீடு பணத்தில் ஏ.ஆர்.மால் மற்றும் பல மாவட்டங்களில் நகைக்கடையின் கிளைகள் என தொழிலை பெருக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சில நாட்கள் வட்டியை வாரி வீசி வந்த இந்நிறுவனம், கடந்த சில வாரங்களாக வட்டித் தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில், ஏமாந்த பொதுமக்கள் பலரும் நகைக்கடை, ஏ.ஆர்.மால் என முற்றுகையிட, குண்டர்களை வைத்து தாக்கியதால் வேறு வழியின்றி அனைவரும் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று ஏ.ஆர்.டி நகைக்கடை ஊழியர்களான ஆசிக், விமல் அந்தோணி ஆகிய இருவரும் பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஒரு நகை கடைக்கு சென்று, 3 கிலோ தங்க நகைகளை வாங்கி கொண்டு, ஓலா காரில் அண்ணாநகருக்கு வந்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அண்ணாநகர் ரவுண்டானா அருகே வந்த போது நகைக்கடை ஊழியர் ஒருவர் அங்கு நின்று கொண்டிருந்த பெண் நிர்வாகியான பவானி என்பவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, வெள்ளை நிற சொகுசு காரில் வந்த ஒரு கும்பல், காரில் மூவரையும் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண்ணை மட்டும் வாவின் அருகே இறக்கி விட்டு, நகைக்கடை ஊழியர்களை கடத்தி சென்று தாக்கி அவர்களிடம் இருந்த 3 கிலோ தங்க நகைகளை பறித்து கொண்டு, நொளம்பூர் பைபாஸ் சாலையில் இருவரையும் விட்டு தப்பிச் சென்றதாக நகைக்கடை ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், ஆசிக் மற்றும் விமல் அந்தோணி ஆகிய இருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஊழியர்களே திட்டமிட்டு நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, போலீசார் நகைக்கடை ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சென்னை நொளம்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏ.ஆர்.டி என்ற நிறுவனம், பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளது. மேலும், இதற்காக பல்வேறு பொதுமக்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை, மூவரும் சேர்ந்து வசூல் செய்து நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளனர்.
தற்போது உள்ள சூழலில், பணம் கிடைக்காது என்பதால் நகைக்கடைக்கு நகை வாங்கும் போது, அந்த நகையை முதலீடு செய்த பணத்திற்கு பதிலாக எடுத்துகொள்ளலாம் எனத் திட்டமிட்டு நாடகமாடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பேரில், ஆசிக், விமல் அந்தோணி மற்றும் கடை மேலாளார் உட்பட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, நொளம்பூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார்களை வழங்கி வருவதால், ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ஆரோன் உட்பட நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். நம்பிக்கை மோசடி, மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான உரிமையாளர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அதிகப்படியாக புகார்கள் வருவதால் இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை திருடிய 4 பெண்கள் கைது!