தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு கரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிறப்பு கரோனா தடுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர், மற்ற மாவட்டங்களுக்கும் சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில்,சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை, வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு மணிகண்டன், வளசரவாக்கம் மண்டலத்திற்கு பிரபு ஷங்கர், பெருங்குடி மண்டலத்திற்கு அமுதவல்லி ஆகியோரை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர்களாக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.