சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் திருவல்லிக்கேணி தனியார் தங்கும் விடுதியில் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சாவுடன் நின்றிருந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தனியார் நிறுவனத்தில் டெலிகாலராகப் பணியாற்றும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆசிஸ் (21), மருத்துவப் பிரதிநிதியாகப் (மெடிக்கல் ரெப்பாக) பணியாற்றிவரும் வடபழனியைச் சேர்ந்த பாலாஜி (20) என்பவரிடம் கஞ்சாவை வாங்கியது தெரியவந்தது.
அதன்பின்னர் பாலாஜியை கைதுசெய்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் கஞ்கை ராஜ் என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை சென்னைக்கு கொண்டுவந்து சப்ளை செய்துவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் கஞ்கை ராஜிடம் கஞ்சா வாங்குவதுபோல், அவரை சென்னைக்கு வரவழைத்து கைதுசெய்ததோடு, அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா, கஞ்சா விற்கப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து, மூவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போலி அமெரிக்க டாலர்களை இந்திய பணமாக மாற்ற முயன்ற நைஜீரியா வியாபாரி கைது!