சென்னை: கோயம்பேடு அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(48). சினிமா பைனான்சியரான இவரது வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலையடுத்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவானதாகவும், வீட்டின் ஒரு அறையில் மட்டும் ரத்தக் கரைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார், வீட்டில் இருந்தவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் சினிமா பைனான்சியர் வெங்கட்ராமன் அவரிடம் பணிபுரியும் மதுரவாயலை சேர்ந்த சரவணன்(29), திலீப்(30) ஆகிய மூன்று பேரும் நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் (பிப்.24) சரணடைந்தனர். அப்போது அந்த மூவரும் அயனம்பாக்கத்தைச் சேர்ந்த பாபுஜி (51) என்பவரை கொலை செய்து அவரது உடலை சென்னை விமான நிலையம் பின்பகுதியில் உள்ள கொளப்பாக்கம் குப்பை கிடங்கில் வைத்து எரித்து விட்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து நொளம்பூர் போலீசார் மாங்காடு போலீசாடன் இணைந்து சென்று பார்த்தபோது கருகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத சோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சினிமா பைனான்சியரான வெங்கட்ராமனிடம், கலெக்சன் ஏஜென்டாக பாபுஜி பணிபுரிந்து வந்துள்ளார்.
அவரது வீட்டில் இருந்து சுமார் ஐந்து பவுன் நகை மற்றும் கலெக்சன் பணத்தையும் பாபுஜி கையாடல் செய்ததாகவும், அதுமட்டுமின்றி வெங்கட்ராமன் குறித்து பல்வேறு இடங்களில் அவதூறாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த பாபுஜியை 2 நாட்களாக காணவில்லை என்று நொளம்பூர் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்து இருந்தனர்.
இந்நிலையில், தலைமுறைவாக இருந்த பாபுஜி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வந்தபோது அங்கிருந்த சரவணன், திலீப் இருவரும் சேர்ந்து பாபுஜியை காரில் கடத்திக் கொண்டு வெங்கட்ராமன் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும். பின்னர், அங்கு வீட்டில் வைத்து அவரிடம் மூன்று பேரும் நகை, பணம் குறித்து கேட்டு இரும்பு ராடால் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. பலமாக தாக்கியதால் பாபுஜி வீட்டிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உடலை எடுத்துச் சென்று, கொளப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகை, பணம் திருடியதாக பாபுஜியை அழைத்து கொலை செய்தார்களா? அல்லது அதிக அளவில் பணத்தை மோசடி செய்தால் கொலை செய்தார்களா? அல்லது கொலைக்கு பெண் விவகாரம் ஏதாவது உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் நொளம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அவர் கடத்தப்பட்ட இடம் கோயம்பேடு பேருந்து நிலையம் என்பதால் தற்போது இந்த வழக்கு கோயம்பேடு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் "ஜாம்பி" போல் நடந்து கொள்ளும் மக்கள்.. புதிய மாற்று மருந்தால் வெடித்த பயங்கரம்..