கரோனா வைரஸ் காரணமாக சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க முகக் கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் நேற்று மட்டும் 511 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 65 மருத்துவ முகாம்களும், திருவிக நகரில் 47 மருத்துவ முகாம்களும், தேனாம்பேட்டையில் 55 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
இந்த 511 மருத்துவ முகாம்களில் மொத்தம் 29,422 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 1,693 நபர்களுக்கு அறிகுறி இருந்ததால், அவர்களை கரோனா வைரஸ் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்களுக்கு நோய்க்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும் மே 8 தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 13,724 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 8 லட்சத்து 79 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.