சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விதிமீறல் நடைபெற்றால் புகார் தெரிவிக்குமாறு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அண்மையில் கூறியிருந்தது.
புகார் மையம்
மேலும் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் பொதுமக்கள், வேட்பாளர்கள் மீது புகார் பெறுவதற்காக 24 மணி நேரம் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய எண்கள் மூலம் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இம்மையமானது கடந்த 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கியது. அன்று முதல் நேற்று (செப்.24) வரை. இதில் 285 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இப்புகார்களுக்கு உரிய விளக்கங்கள், தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. புகார்களின் தன்மைக்கு ஏற்ப அவை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை இந்த புகார் மையம் தொடர்ந்து செயல்படும். அதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
இதையும் படிங்க: பருவமழை முன்னெச்சரிக்கை - களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்