சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவருக்கு ஏப். 19ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏப். 20ஆம் தேதி 2 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதனால், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், மேலும் 9 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது.
அந்த வகையில் அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என்று அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த பரிசோதனை முடிவின்பசி, ஏப். 22ஆம் தேதி 21 பேருக்கும், 23ஆம் தேதி 22 பேருக்கும், 24ஆம் தேதி 5 பேருக்கும், 25ஆம் தேதி 20 பேருக்கும், 26ஆம் தேதி 32 பேருக்கும், 27ஆம் தேதி 33 பேருக்கும் தொற்று உறுதியானது.
இந்த நிலையில், இன்று (ஏப்.28) மேலும் 26 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ஐஐடியில் 171 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3 பேர் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். 168 பேருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், ஐஐடி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐஐடியில் மொத்தமாக 7 ஆயிரத்து 490 பேர் உள்ள நிலையில் இதுவரை 6 ஆயிரத்து 650 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஐஐடிக்கு நேரில் சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களிடம் நலம்விசாரித்தார். கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ஐஐடியில் இதுவரை 6 ஆயிரத்து 650 பேருக்கு பரிசோதனை செய்ததில் 171 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
வரும் நாள்களின் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. இதுவரை கரோனா, ஒமைக்ரான், பிஏ 2 வகை தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிகாரில் ஒமைக்ரான் மாறுபாடான பிஏ. 12 தொற்று உறுதி