புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்க கையேடு வழங்கும் விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளையும் கையேட்டினையும் வழங்கினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''சட்ட மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறேன் என்று கூறுவதற்கு அதிகாரம் கிடையாது. ஒப்புதல் அளிக்கலாம் அல்லது மசோதாவைத் திருப்பி அனுப்பலாம். இழுத்து அடிப்பதற்காக இது போன்ற கருத்துகளை ஆளுநர் கூறி வருகிறார். ஆளுநர் சட்ட மசோதாக்களுக்கு விளக்கங்களை கேட்டால் அதை நாங்கள் கூறுவதற்குத் தயாராக உள்ளோம். ஆளுநர் விவகாரத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.
அந்த வழக்கின் முடிவு எல்லா மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். அதுவரை பொறுத்திருப்போம். சனாதனம் தான் காலாவதி ஆகிவிட்டது. திராவிடம் காலாவதி ஆகவில்லை. ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு அதனை பின்வாங்குவதால், தமிழக அரசுக்கு எந்தவித பின்னடைவும் கிடையாது. மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் சட்டத்தை பின்வாங்கி இருப்பது தமிழக அரசின் தைரியத்தை தான் காட்டுகிறது. தன்னுடைய பிறந்தநாளுக்கு தானே வாழ்த்துச் சொல்வது போன்று இருக்கும் என்பதால் தான், தீபாவளி உள்ளிட்ட இந்து விழாக்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வது கிடையாது. மத்திய அரசு பயமுறுத்துவதற்காக தான் என்ஐஏ உள்ளிட்ட சோதனைகளை நடத்தி வருகிறது'' என்றார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ''தமிழ்நாட்டில் புதிதாக 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. மணல் குவாரிகளில் சிசிடிவி கேமராக்கள் வைத்து அதிக ஆழத்திற்கு மணல் அல்லாமல் இருப்பதற்கு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கர்நாடக மாநிலத்தில் இருந்து சாயக்கழிவுகள் தென்பெண்ணையாற்றில கலப்பதைத் தடுப்பதற்கு அரசு முதன்மைச்செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் கடிதம் எழுதியுள்ளார். முறையாக கர்நாடகா மாநிலம், சுத்திகரிப்பு பணிகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் சாயக்கழிவுகள் கலக்காமல் பாதுகாக்கப்படும்'' என்றார்.
இதையும் படிங்க: திருவள்ளூர் நகர திமுக கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது