சென்னை: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கு கரோனா தொற்று சிகிச்சை அளிக்கும் வகையில், 6 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டி தளத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்,
"தொற்றை கட்டுப்படுத்துவது சம்மந்தமான நடவடிக்கைகள் அனைத்து இடங்களிலும் வேகமாக நடந்து வருகிறது. இதை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்ற முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, பல தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் மற்றும் செரியூட்டிகளை கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதலமைச்சர் பொறுப்பேற்ற மே மாதம் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பொறுப்பேற்ற அன்றே தொற்றுப் பரவல் மிக பெரிய சவாலாக இருந்தது.
பாதிப்பு குறைவு
தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கையால் தற்போது தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. 10 முதல் 15 நாட்களில் 35,000ஆக இருந்த கரோனா தொற்று பாதிப்பு 8000ஆக குறைந்துள்ளது. இன்னும் பல மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில், பாதிப்பு 5 விழுக்காடாக குறைந்துள்ளது.
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறிய நிலையில் பொதுமக்கள் அனைவரும் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். தற்போது, 5,56,350 தடுப்பூசி கையிருப்பில் உள்ளன. இன்று(ஜூன்.19) மாலை 3 லட்சம் தடுப்பூசி வரும் நிலையில் உள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடுப்பூசி பொறுத்த வரை கட்டாயமாகும் நிலைமை வராது.
கறுப்பு பூஞ்சை பாதிப்பு
கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து மொத்தமாக 45,500 வந்துள்ளன. தமிழ்நாட்டில் 2,382 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 111 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
கரோனா தொற்றின் மூன்றாம் அலையை பொறுத்தவரை, 80 விழுக்காட்டிற்கும் மேலான மருத்துவர்கள் வரும் என்று சொல்கிறார்கள். நாம் வராது என்று நினைப்போம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆன்லைனில் கறுப்பு பூஞ்சை மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றவர்கள் கைது