சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 21 தமிழக மீனவர்கள், இன்று (ஜனவரி 6) மாலை விமான மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு வாகனத்தில், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்த்த 13 மீனவர்களும், கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நெடுந்தீவு அருகே, கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர், அங்கு வந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 21 மீனவர்களைக் கைது செய்தனர்.
அதைப்போல், டிசம்பர் 9ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கைது செய்தனர். மேலும், மீனவர்களின் படகுகளையும் இலங்கைக்குக் கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி இலங்கை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மற்றும் பிரதமருக்கு அவசர கடிதங்கள் அனுப்பினார்.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, 21 தமிழக மீனவர்களைக் கடந்த மாதம் 21ஆம் தேதி, இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதோடு விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தியத் தூதரக அதிகாரிகள் 21 தமிழக மீனவர்களையும், தமிழ்நாட்டுக்கு விமானத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மீனவர்கள் யாருக்கும் பாஸ்போர்ட் இல்லாததால், அனைவருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள், அவசரக்கால எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கினார்கள். அதோடு 21 மீனவர்களை, இந்தியத் தூதரக அதிகாரிகளே விமான டிக்கெட்கள் ஏற்பாடு செய்தனர்.
மேலும், 21 மீனவர்கள், இலங்கையிலிருந்து இன்று (ஜனவரி 06) மாலை, சென்னை வந்த, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை வந்த 21 மீனவர்களை, சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நாட்டின் முக்கிய அருங்காட்சியகங்களுக்கு இ-மெயிலில் போலி வெடிகுண்டு மிரட்டல்!