சென்னை: தாம்பரத்தில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்ததாக 21 விநாயகர் சிலைகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர். கரோனா தொற்று அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவந்த நிலையில், நேற்றைய தினம், மத்திய அரசு, விநாயகர் சதுர்த்தியை மக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இந்தச் சூழ்நிலையில், சென்னை தாம்பரத்தில் உள்ள இந்து புரட்சி முன்னணி நிர்வாகி வீட்டில், பொது இடங்களில் வைப்பதற்காக 21 சிலைகளை வாங்கி வைத்துள்ளார் என்ற தகவல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், தாம்பரம் வருவாய் ஆய்வாளர் சங்கீதா, தாம்பரம் உதவி ஆணையாளர் சீனிவாசன் ஆகியோர் 21 விநாயகர் சிலைகளையும் கைப்பற்றி தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியன்று ஜெப யாத்திரை: பிரசுரம் விநியோகித்தவர் மீது வழக்குப்பதிவு