சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால், மக்கள் ஆவணங்களின்றி பணம், பொருள் ஆகியவை கொண்டு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவரும் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்த பொருள்கள் மற்றும் பணம் குறித்த செய்திக் குறிப்பை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ.209 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், ரொக்கமாக 76 கோடி ரூபாயும், ஒரு கோடி 42 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் 94,842 லிட்டரும், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 396 கிலோ கிராம் தங்கமும், 1 கோடி 6 லட்ச ரூபாய் மதிப்பிலான 294 கிலோ கிராம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 209 கோடி ரூபாய்" எனத் தெரிவித்துள்ளார்.