சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு நேற்று நள்ளிரவோடு முடிவடைந்து, 2024 புத்தாண்டு பிறந்தது. அந்த வகையில் 2024 புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
பொதுவாக புத்தாண்டை வரவேற்கும் வகையில், பொதுமக்கள் நள்ளிரவில் வாணவேடிக்கைகளால் வர்ண ஜாலமிடுவதும், புத்தாண்டின் முதல் நாளில் புத்தாடை உடுத்தியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்வது வழக்கம். புத்தாண்டு என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம். அது எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும்.
குறிப்பாக சென்னையை பொருத்தவரை மிகப்பெரிய சுற்றுலா தளமான மெரினா கடற்கரையில் பல பகுதிகளிலிருந்து மக்கள் ஒன்று கூடுவார்கள். இந்த வருடமும் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சமே இல்லாமல் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்ட அலைமோதியது. புத்தாண்டு பிறந்த தருணத்தில் மக்கள் எழுப்பிய சத்தமும் விண்ணை பிளந்தது. மேலும் அதிகளவு மக்கள் கூடுவார்கள் என்பதால் திருட்டு மற்றும் அசாம்பாவிதங்களை தடுக்க காவல்துறையினர் மெரினா கடற்கரை பகுதியை சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுத்தபட்டிருந்தனர்.
உயர் கோபுரங்களை அமைத்தும் பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியும் மெரினா கடற்கரை பகுதியில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் காவல்துறையினர் கண்கானித்து வந்தனர். மேலும் மெரினா கடற்கரை மட்டுமல்லாது பெசன்ட் நகர் கடற்கரை பகுதியிலும் மக்கள் கூட்டம் அலைகடலென குவிந்தது.
பெசன்ட் நகர் பகுதியைப் பொருத்தவரை அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் இருப்பதால் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்கு சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும் அதிகமான மக்கள் வருவது வழக்கம். அந்த வகையில் சிறப்பு வழிபாட்டிற்கு இந்த வருடமும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
பெசன்ட் நகரில் நடக்கும் இந்த சிறப்பு வழிபாட்டிற்கு எல்லா வருடமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து கலந்து கொள்வார்கள். அதேபோல இந்த வருடமும் அதிகளவு மக்கள் வருவார்கள் என்பதால், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டிருந்தன. சுற்றுலாத்தலங்கள், திருத்தலங்கள் மட்டுமல்லாது, தனியார் நடசத்திர விடுதிகளிலும் மக்கள் நடனமாடியும், புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறியும் கோலாகலமாக கொண்டாடினர்.
இதையும் படிங்க: பிறந்தது 2024 புத்தாண்டு.. வர்ண ஜாலங்களுடன் வரவேற்ற பொதுமக்கள்!