தமிழ்நாட்டுக்காரர்கள் குசும்புக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நூற்றாண்டை இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் காலமாக மாறிவிட்டது. ஒரு செய்தி காட்டுத்தீபோல் வைரலாக வேண்டும் அதுவும் மக்கள் மத்தியில் விஷ்வரூபம் எடுத்து விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முக்கியமாக ஒரு காணொலி, புகைப்படம், முக்கியத் தகவல்கள் எதுவாக இருந்தாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் டிரெண்டாக்குவது வழக்கமாகிவிட்டது. சமூக வலைதளத்தில் எது ஹிட் அடிக்கும் என்பது புரியாத புதிர்தான். ட்விட்டர் பக்கத்தில் போகிறபோக்கில் கமெண்ட் செய்துவிட்டு போனை ஆஃப் செய்த அடுத்த நிமிடம் நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் கமெண்ட்டுகள் குவியும். அதுபோலத்தான் நேசமணி டிரெண்டிங் ஸ்டார் ஆனார்.
கான்ட்ராக்டர் நேசமணிக்கு என்னதான் ஆச்சு?
ஃபேஸ்புக்கில் சிவில் இன்ஜினியரிங் லேர்னர்ஸ் (Civil Engineering learners) என்ற பக்கத்தில் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு 'இதை உங்கள் ஊரில் எப்படி அழைப்பீர்கள்?' என்று கேட்டுள்ளனர். இதற்கு விக்னேஷ் பிரபாகர் என்ற இளைஞர், "இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலைபார்க்கும்போது பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை அவரது அண்ணன் மகன் சுத்தியல் போட்டு உடைத்துவிட்டார் பாவம்" என ப்ரண்ட்ஸ் பட காமெடியை நினைத்து பதிவிட்டுள்ளார்.
![கான்ட்ராக்டர் நேசமணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5551307_neas.jpg)
மோடியை மிஞ்சிய நேசமணி
இதற்குப் பிறகு பதிலளித்தவர்கள் #prayfornesamani என்று பதிவிட்டனர். இந்த ஹேஸ்டேக் காட்டுத்தீ போல் பரவியதுதான் தாமதம் தமிழ்நாட்டு ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறினார் கான்ட்ராக்டர் நேசமணி. இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளிவந்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் பத்து வருடங்களுக்கு பிறகு ஹேஷ்டேக் மூலம் கான்ட்ராக்டர் நேசமணியாக பிரபலமானது.
மீம்ஸ் கிரியேட்டர்களின் கிங் ஆக வலம்வரும் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணிக்கு என்ன ஆச்சு? என்று போன் அழைப்புகள் மூலம் கேட்கும் அளவிற்கு ட்ரெண்ட் ஆனார். மே 29ஆம் தேதி மோடி 2.0 பதவியேற்பை விட #prayfornesamani அதிகம் பேசப்பட்டார்.
#pray for sujith மனிதத்தை வென்ற சுஜித்
![இரண்டரை வயது சிறுவன் சுஜித்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5551307_sujith.jpg)
திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் மரணம் இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இரண்டரை வயது சிறுவன் சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலித்தது. மனிதத்தை வென்ற சுஜித் அவனை போன்று வேறு எவரும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணிக்கக் கூடாது என்பதை விதைத்துவிட்டுச் சென்றுள்ளான். அவனது அழுகுரல் இந்தியாவையே அதிரவைத்தது. அவன் மரணிக்கவில்லை விதைக்கப்பட்டான்.
#கோ பேக் மோடி
![மோடிக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் கோஷம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5551307_modi.jpg)
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது அவரை #கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கால் விரட்டியடித்த வரலாறு எவராலும் மறக்க முடியாது.
சங்கம் முக்கியமல்ல சாப்பாடுதான் முக்கியம்
2019ஆம் ஆண்டை வரவேற்ற பிரவின் என்ற சிறுவனின் காணொலி திரைப்படங்களில் வசனங்களாகப் பேசும் அளவிற்கு டிரெண்டிங் ஆகிவிட்டது. அவரது உறவினர் 'சோறு முக்கியமா சங்கம் முக்கியமா, வீட்டில் அப்பாவிடம் பணம் வாங்கிட்டு வா' என்று கேட்க, அந்தச் சிறுவன் சோறுதான் முக்கியம் பசிக்கும்ல நா சாப்பிட வேண்டாமா என்று அப்பாவி போல் கேட்கும் காணொலி இணையத்தின் பலரது இதயங்களை ரசிக்கவைத்தது.
'புள்ளிங்கோ' ரொம்ப பயங்கரம்
![கானா பாடகர் ஸ்டீபன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5551307_pul.jpg)
சென்னை இளைஞர்களின் அடுத்த அடையாளமாக மாறிவிட்ட 'புள்ளிங்கோ'. இந்த ஆண்டின் புதிய வார்த்தையாக மாறிவிட்டது. புள்ளிங்கோ என்றால் நண்பர்கள். எங்க புள்ளிங்கோ எல்லாம் ரொம்ப பயங்கரம் என்ற கானா பாடலை பாடிய கானா ஸ்டீபன் மூலம் இந்த வார்த்தை மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த புள்ளிங்கோ என்ற வார்த்தையால் இளைஞர்கள் வைத்திருக்கும் பைக், ஹேர்-ஸ்டைல், ஆடை அனைத்திலும் ட்ரெண்ட் செட்டராக இன்றுவரை ஹிட்டடிக்கிறது.