2016ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
102 தபால் வாக்குகளை நிராகரித்து, அந்த வாக்குகளில் முறைகேடு செய்து அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் வெற்றி பெற்றதாக தேர்தல் விதிமுறைக்கு மாறாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், இதனால் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தொல். திருமாவளவன் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி உத்தரவிட்டிருந்தது போல தபால் வாக்குகளை நீதிமன்றத்தில் சமர்பித்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் வந்த தேர்தல் அதிகாரி விஜயராகவன் ஆஜராகி தபால் வாக்குகளைப் பிரித்து ஏன் நிராகரிக்கப்பட்டது என விளக்கம் அளித்தார்.
தேர்தல் அதிகாரி விஜயராகவன் அளித்த விளக்கத்தை அடுத்து தேர்தல் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் தபால் வாக்குகள் சரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் அதிமுக வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லும் என்று உறுதி செய்து, தொல். திருமாவளவன் தொடுத்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 48,450 வாக்குகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் தொல். திருமாவளவன் 48,363 வாக்குகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: மீனவர்கள் நிவாரணத் தொகை வழக்கு - பல்வேறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்!