சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 119
தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் 98ஆயிரத்து 633 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 3ஆயிரத்து 13 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்கும் முறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிகளை உட்கட்டமைப்பை மேம்படுத்த இருக்கிறது. முதல்கட்டமாக 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டு, ஆசிரியர்களுக்கு மடிக்கணினி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேசைகள், ஒரு வருடத்திற்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யபப்ட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு 56லட்சத்து 60ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பீட்டில் டோரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் (CSR Fund) ரூ.28,87,500/- மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை தொடர்புகொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: TNPSC Group 2 Update: குரூப்-2 தேர்வில் விடைத்தாள் குளறுபடி; தேர்வு நேரத்தில் மாற்றம்!