சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு சுரங்கப்பாதை அருகே இருக்கும் பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜனவரி 27) காலை ஜேசிபி எந்திரம் மூலம் கட்டடங்களை இடிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து வெளிப்புறமாக விழுந்துள்ளது.
அந்த நேரத்தில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண் இடிப்பாடுகளில் சிக்கினார். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கும், ஆயிரம் விளக்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் 20 நிமிடமாக போராடி படுகாயங்களுடன் பெண்ணை மீட்டனர்.
இதையடுத்து அந்த பெண் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரியா. இவர் சென்னையில் தங்கி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக அண்ணா சாலை வழியாக நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கி பலியானார் என்பது தெரியவந்தது.
கடந்த டிசம்பர் மாதமே மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து பணியில் சேர்ந்துள்ளார். இவர் பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கியிருந்து தினமும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு பணிக்கு செல்வார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
பழைய கட்டடத்தை இடிக்கும் போது மாநகராட்சி அனுமதி பெற்ற பின் தான் இடிக்க வேண்டும். அதே போல் பழைய கட்டடத்தை இடிக்கும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆனால், இதில் எதையும் பின்பற்றாமல் கட்டடத்தை இடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: வைரல் வீடியோ: தொண்டரை தாக்கிய அமைச்சர் நேரு