சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தல் குறித்த ஆர்வம் பொதுமக்களிடத்தில் அதிகரித்துள்ளதன் காரணமாக, தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டிற்குக் கூடுதல் தடுப்பூசிகளை வழங்கக்கோரி, ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 21 பார்சல்களில், 2 லட்சத்து 45 ஆயிரத்து 345 கோவீஷீல்ட் தடுப்பூசிகள் இன்று (ஆக.4) சென்னை வந்தடைந்தன.
இதனையடுத்து பெறப்பட்ட தடுப்பூசி பார்சல்களை, சென்னை விமானநிலைய அலுவலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா். பெறப்பட்ட தடுப்பூசி பார்சல்கள் குளிர்சாதன வாகனங்களில் ஏற்றப்பட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்ப, தமிழ்நாடு முழுவதும் பிரித்து அனுப்பப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வரும் கேரள பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை