சென்னை: போரூரில் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் கஞ்சா எடுத்துச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து போரூர் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் போரூரில் இன்று (பிப்.13) பத்திரிகையாளர்கள் எனக்கூறி மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி சோதனை செய்தனர். இவ்வாறு சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் தொடர்ந்து அவ்விருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவர்களிடம் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த இருவரில் ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொருவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், சூர்யா(30) என்பதும் மற்றொருவர் பிரவீன்(29) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சாவுடன், போலியான பத்திரிக்கையாளர் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. செல்லும் இடங்களிலெல்லாம் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தாங்களே போலியான பத்திரிக்கையாளர் அடையாள அட்டையைத் தயார் செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இவ்வாறு கஞ்சா விற்பனை செய்வதற்காகப் போலியான பத்திரிக்கையாளர் அடையாள அட்டையுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆவினை அழிக்க அரசு முயற்சி என பால் முகவர்கள் சங்கம் புகார்!