ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2 மணி அளவில் வந்தடைந்தது. அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் பொழுது சந்தேகப்படும் வகையில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களிடமிருந்து மேற்கொண்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த லெபுரு கோபிகிருஷ்ணன்(56), பாண்டி குண்டா நாராயண ரெட்டி(43) மற்றும் ஸ்ரீதர்(54) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உரிய ஆவணம் இன்றி 2.5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க நகைகள் கொண்டு வந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் ஸ்ரீதர் என்பவர் 15 லட்சத்திற்கு மேல் பணத்தை உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து ரயில்வே பாதுகாப்பு படை குற்ற புலனாய்வு போலீசார் 2.5 தங்கம் மற்றும் 15 லட்சத்து 57 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க நகைகளை வருமான வரி துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: பல லட்சம் மதிப்புள்ள ராசிக்கல் என ஏமாற்றி விற்ற இருவர் கைது!