சென்னை: வீடுகளில் சுயமாக கரோனா பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது அல்ல என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், இன்று (ஜன.22) நடைபெற்ற 19ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "இன்று 19ஆவது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. இதில் மொத்தமாக 16 லட்சத்து 29 ஆயிரத்து 736 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விழுக்காடு 89.6 சதவீதம் எனவும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விழுக்காடு 66.8 சதவீதம் ஆகவும் உள்ளது. 15 முதல் 18 வயதுடையோர் இதுவரை 25 லட்சத்து 66 ஆயிரத்து 535 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டோர் இதுவரை 9 கோடியே 5 லட்சத்து 36 ஆயிரத்து 753 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ளவர்களில் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 414 பேர் என 40 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் கரோனா பரிசோதனை கருவிகளை மக்கள் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பிய போது, சுயமாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனை செய்வது பாதுகாப்பானது அல்ல.
ஐசிஎம்ஆரின் அறிவுறுத்தலின்படி ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதுதான் பாதுகாப்பானதாகும். முகக்கவசங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்ற கேள்விக்கு, முகக்கவசங்களின் விலை பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆய்வுக் கூட்டம்