சென்னை: கரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி பேராயுதமாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சியில் அதிகபடியான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாநகர் முழுவதும் மொத்தம் 45 கரோனா தடுப்பூசி மையம், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நேற்று (ஜூலை 14) சென்னையில் மொத்தம் 29 ஆயிரத்து 440 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 18 ஆயிரம் நபர்கள் தங்களுடைய இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
கரோனா தடுப்பூசி திட்டத்தில் இதுவரையில் இல்லாத வகையில் நேற்று இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதே அதிக எண்ணிக்கை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
18 - 44 வயதுக்கு உள்பட்டவர்கள் 15842 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 13598 பேருக்கும் நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னையில் இதுவரை 27 லட்சத்து 73 ஆயிரத்து 701 நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்துவதற்காக சிறப்பு முகாம் - சென்னை மாநகராட்சி