சென்னை : சென்னையில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்கள், போதைப் பொருள்கள் கடத்தல், நில அபகரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருள்கள் கடத்தல், பாலியல் குற்றங்கள், உயிர்காக்கும் மருந்துகளை கடத்துபவர்கள் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோரை சென்னை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நேற்று (ஜுன் 19) வரை கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 115 நபர்கள், சங்கிலி, செல்போன் பறிப்பு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 29 நபர்கள், சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 12 நபர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்ற 12 நபர்கள், உணவு பொருள் கடத்தியதாக ஒருவர், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிவைத்து விற்பனை செய்த நான்கு நபர்கள் என மொத்தம் 173 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், கரோனா தொற்று பாதிப்புக்கு உயிர்காக்கும் மருந்தாக பயன்படக்கூடிய ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்போரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 19 நபர்கள், ரெம்டெசிவிர் விற்ற இருவர், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட இருவர் என மொத்தம் 23 நபர்களை காவல் துறையினர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
உயிர்காக்கும் மருந்துகளை கள்ளசந்தையில் விற்றால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என சென்னை காவல் துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் மீதான குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்!