நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு, உள்நாட்டு விமான சேவைகள், ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பங்களாதேஷ், பிரான்ஸ் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சொந்த நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் முலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதுபோல் வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. வெளிநாடுகளில் சுற்றுலா சென்று தவிப்பவர்களை அழைத்து வர 'வந்தே பாரத்' என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 7ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
முதல்கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர 60க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை, துபாய், குவைத், அமெரிக்கா, மஸ்கட், வங்கதேசம், மலேசியாவிலிருந்து 7 சிறப்பு விமானங்களில் 1, 191 பேர் அழைத்து வரப்பட்டு தனியார் கல்லூரி, தனியார் தங்கும் விடுதிகளில் 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து சிறப்பு விமானம் சென்னை வந்தடைந்தது. இதில், 50 பெண்கள் உள்பட 167 மாணவ, மாணவிகள் வந்தனர். இவர்களுக்கு குடியுரிமை, சுங்க இலாகா அலுவலர்கள் சோதனை முடிந்த பின்னர், விமான நிலையத்திலேயே தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சார்பில் கரோனா பரிசோதனைக்காக சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
பின்னர் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக 167 பேரும் சென்னை, புறநகரிலுள்ள தனியார் கல்லூரி, தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: குடிசைப் பகுதி மக்களுக்கு இலவச முகக் கவசம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி