தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால் கடந்த 28ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான போஸ்டர், பேனர், பெயர் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சி பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு குழு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் கொண்டு செல்லபடுகிறதா என்பதையும் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் தேர்தலின்போது எந்தவித அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குற்றப் பதிவேடு உள்ள ரவுடிகளை கண்டறிந்து சிறையிலும் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி முதல் இன்று காலைவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 24 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை கொண்டு சென்றதாக 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு காவலர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுவரை உரிமம் பெற்ற 1538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1089 பேரிடம் பிராமண பத்திரத்தில் ஆறு மாதம் எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளனர்.