சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் கொழும்பிலிருந்து இன்று (நவ.29) சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த 5 ஆம் தேதி கச்சத்தீவு அருகே கடலில் இரண்டு படகுகளில், மீன்கள் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நமது தமிழ்நாடு மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எல்லையைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக, அவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
விடுதலையான 15 மீனவர்கள்: இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர்களை விடுவிக்கக் கோரி, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் (Indian Embassy in Sri Lanka) , இலங்கை அரசிடம் பேசினர்.
சென்னை வந்தடைந்தனர்: இந்நிலையில் இலங்கை நீதிமன்றம், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 15 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டதோடு விடுதலையான மீனவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இவர்கள் யாருக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாததால், 15 மீனவர்களுக்கும் இந்திய தூதரகம் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கியது.
சொந்த ஊர் திரும்பினர்: அதோடு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, இன்று (நவ.29) அதிகாலை இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, சென்னைக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் அந்த 15 மீனவர்களையும் அனுப்பினர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். அதன் பின்பு மினி பஸ் மூலம் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாஜக சார்பில் சசிகலா புஷ்பா வரவேற்பு: சென்னை விமான நிலையத்தில் வெளியே வந்த மீனவர்களை முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா தலைமையில், பாஜகவினர் கொடிகளுடன் வந்து வரவேற்றனர். மீனவர்கள் இலங்கையில் இருந்து வரும் தகவலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்களுக்கு தெரிவித்து விமான நிலையம் சென்று வரவேற்க வேண்டும் என்று கூறினார். எனவே நாங்கள் வந்து வரவேற்கிறோம். பிரதமர் மோடியின் பெரும் முயற்சியால் இந்த மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வந்துள்ளனர். பிரதமர் மோடி இருக்கையில் இந்திய மீனவர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை என்று சசிகலா புஷ்பா கூறினார்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க CM கடிதம்