பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களில், 1 லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். பொறியியல் படிப்புகளில் பிஇ, பிடெக் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான பணிகள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தாண்டு பொறியியல் படிப்பில் சேர ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர்.
மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான வசதிகளை பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செய்திருந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை 1,11,436 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
பொறியியல் படிப்பில் சேருவதற்கு, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பங்களில் தவறுதலாகப் பதிவு செய்து இருக்குமோ என்ற எண்ணத்தில் சிலர் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களின் பதிவு கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 436 மாணவர்களுக்கும் ரேண்டம் எண் வெளியிடப்படும். சான்றிதழ்கள், மாணவர்களை நேரில் அழைக்காமல் அலுவலர்கள் மூலம் சரிபார்க்கும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.