சென்னை: தமிழ்நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் மூலமாக அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் பொருட்களை கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு சிலர் விற்று வருகின்றனர்.
இவர்களை தடுக்க தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் சார்பாக கடந்த ஒரு வாரமாக 14 தேதி முதல் 20 தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக ஈடுபட்ட ரோந்து பணிகளில் ஈடுபட்ட போது பல்வேறு இடங்களில் கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பொது விநியோக திட்டத்தில் வழங்கப்பட்ட, 53 லட்சத்து 71 ஆயிரத்து 209 ரூபாய் மதிப்பிலான 9447 குவிண்டால் அரிசி, 25 லிட்டர் மண்ணெண்ணெய், 41 எரிவாயு உருளை, 144 கிலோ கோதுமை உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுப்பட்ட 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சிக்கனுக்கு பதிலாக புறா பிரியாணி? பகீர் புகாரால் களத்தில் இறங்கிய போலீஸ்!