சென்னை: பாராளுமன்றத்தில் ராஜ்மோகன் உன்னிதன் (RAJMOHAN UNNITHAN), பைனி பேகனன் (BENNY BEHANAN) ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் அளித்துள்ளார்.
அதில், ”கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் கல்வி நிறுவனங்களை மத்திய , மாநில அரசுகள் நிர்வாகம் செய்து வருகின்றன. மாநிலப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களில் இறந்தவர்களின் விவரம் இல்லை. ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் 2017 முதல், 2021 முறையான காலகட்டங்களில் விபத்துகள் மற்றும் தற்கொலைகள் காரணமாக என்ஐடி, ஐஐடி, எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 13 ஆயிரத்து 89 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தேசியக் குற்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மாணவர்கள் 7,396 பேர், மாணவிகள் 5 ஆயிரத்து 693 பேர். தமிழ்நாட்டில் 2018 முதல் தற்போது வரை 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் தற்கொலைகளை பொறுத்தவரை, 2018 முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஐஐடி, திருச்சி என்ஐடி மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்குத் தேவையான திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கையில் அளிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், யோகா உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அவர்களுடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு பேராசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா காலத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்படி மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பல்கலைக் கழக மானியக்குழு 2009ஆம் ஆண்டு முதல் கல்லூரிகளில் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டும், அவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதற்கு தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் குழு, புகார் தெரிவிக்கும் வசதி போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: SSLC Exam: கரோனோவால் இடைநிற்றல்.. 50,000 மாணவர்களை பொதுத்தேர்வு எழுத வைத்த கல்வித்துறை.. சாத்தியமானது எப்படி?