சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானங்களில் வரும் பார்சல்களை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வந்தனர். அப்போது, பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பார்சலில் கரோனா வைரஸ் தடுப்பு மாத்திரைகள் எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனால், சந்தேகத்தின்பேரில் சுங்கத் துறை அலுவலர்கள் அந்த பார்சலை சோதனை செய்தபோது அதில், இளஞ் சிவப்பு வண்ணங்களில், பன்றி முகம் போல் வடிவம் கொண்ட மாத்திரைகள் இருந்தன. அதனை சோதனை செய்தபோது இந்தியாவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பார்சலிலிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 130 போதை மாத்திரைகளை சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து, போதை மாத்திரைகள் வந்த முகவரியை ஆய்வு செய்தபோது, அந்த முகவரி போலியானது என்பது தெரியவந்தது. இது குறித்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ. 64 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல்: விமான நிலையத்தில் இருவர் கைது!