இன்று தொடங்கிய 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணி வரை நடைபெறவுள்ளது. மாணவர்கள் கேள்வித்தாளை படிப்பதற்கு 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் மாணவர்கள் தேர்வினை எழுத தொடங்கினர்.
இத்தேர்வை, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏழாயிரத்து 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். அதேபோல 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.
பொதுத்தேர்வுக்காக இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் வழியில் பயின்ற நான்கு லட்சத்து 54 ஆயிரத்து 367 பேருக்கு தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மூன்றாயிரத்து 330 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகளும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். குறிப்பாக, இரண்டு திருநங்கைகள் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சரவணகுமார், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து விளக்கினார்.
தோ்வு மையங்களைப் பாா்வையிடுவதற்காக நான்காயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் எவரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசுத் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: 'அரசுத் தேர்வு முறைகேடுகளில் எத்தகைய பெரிய சக்தி ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை அவசியம்'