சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 129ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனடிப்படையில் திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு அம்மாவட்ட ஆட்சித் தலைவர் கு. ராசமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சமூக விலகலைப் பின்பற்றி அரசு அலுவலர்களும் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி. வினை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அம்பேத்கர் சிலை முழுவதும் மதுரை மாநகராட்சி ஊழியர்களால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் திமுக சார்பில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், இளங்கோ உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைப்போன்று, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் படத்திற்கு அம்மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
அரியலூரில் மாவட்ட ஆட்சியர் ரத்னா அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் சந்திரசேகரன், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன், வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், அரசு அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், கரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் அவர்கள் வீடுகளில் உள்ள அம்பேத்கா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க...மாணவர்களால் நிரம்பி வழியும் அரசு ஆன்லைன் கல்வி இணையதளங்கள்!