டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 129 இஸ்லாமியர்கள், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தங்கி மதப் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், உள்நோக்கத்துடன் நோய் தொற்று பரப்பியதாகவும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பிணை பெற்ற பிறகும், தங்களை சிறையிலிருந்து விடுவிக்காமல், சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறைச்சாலை வளாகத்திலேயே வைத்துள்ளதாகக் கூறிய அவர்கள், தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், தமிழ்நாடு முழுவதும் அவர்கள் மீது இதுவரை 14 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவர்கள், சென்னை சூளையில் உள்ள ஹஜ் சொசைட்டி கட்டடத்திற்கு இன்னும் 3 நாள்களில் மாற்றப்படவுள்ளனர். அதற்கான ஒப்புதல் ஹஜ் சர்வீஸ் கமிட்டியிடம் மாவட்ட ஆட்சியர் சார்பில் பெறப்பட்டுள்ளது.
ஹஜ் கமிட்டி கட்டடத்தில் 89 அறைகள் உள்ளன. போதிய கழிவறை வசதிகள், சுகாதார வசதிகள் தொடங்கி தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசு தரப்பின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.