சென்னை: போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் சுதாகர், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட வேக வரம்பு கட்டுப்பாடு குறித்து இன்று (நவ.05) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வானக சட்டப்படி, புதிய வேகக் கட்டுப்பாடு திட்டத்தின் வேகக் கட்டுப்பாடு வாகனங்களுக்கு ஏற்றார்போல் அதிகரித்து உள்ளது.
நேற்றைய தினம் வேகக் கட்டுப்பாட்டு விதிப்படி 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வேகக் கட்டுப்பாடு குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பாகச் சாலையில் செல்வதற்காகவே இந்த புதிய வேகக் கட்டுப்பாடு அமைக்கப்பட்டு உள்ளது. சாலை காலியாக இருந்தாலும் வேகமாகச் செல்ல வேண்டாம்.
தீபாவளி சமயங்களில் போக்குவரத்து நெரிசல்களைக் குறைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வாகனம் வேகமாகச் செல்லும் பொழுது அதன் கட்டுப்பாடு இழப்பு ஏற்படும். ஆகவே வேகக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
அண்ணா சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட யூ டர்ன் பொருத்தவரை, பலரும் பல கருத்துக்களை எழுப்புகிறார்கள்.
மூன்று கட்ட சோதனையின் பேரில் இந்த யூ திருப்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய யூ திருப்பங்களால் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த புதிய யூ திருப்பங்கள் பற்றி மக்களிடம் கருத்துக் கேட்கையில், X தளத்தில் 70 சதவிகித மக்கள் இதை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபோதையில் வண்டியை கொளுத்துவேன் என போலீசாரை மிரட்டிய மதுப்பிரியர் - சாத்தான்குளத்தில் நடந்தது என்ன?
சாலைகளில் புதிதாகப் பேருந்துகள் செல்வதற்கு லேன் அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். மேலும் பேருந்துகளில் படியில் நின்று பயணிப்பதைக் கட்டுப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளோம். விதிமுறைகளை யாரும் மீறக்கூடாது, காவல் துறையினரும் மீறுவது குற்றம்.
மேலும் ஆலந்தூரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பேருந்து நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து சிக்னல்களிலும் ரிமோட் முறையில் சிக்னல்கள் செயல்பட உள்ளது. கூடிய விரைவில் அனைத்து சிக்னல்களுக்கும் ரிமோட் அளிக்க உள்ளோம்.
மேலும், காவல்துறையில் வாகன விதி மீறல்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவது, ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.மீறி வேறு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "இந்த மலையைத்தான் கிரானைட் குவாரி ஆக்கப்போறீங்களா ஆபிசர்?" - சேக்கிப்பட்டி பனிமலைக்குட்டு பாறையில் ஆய்வு!