சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது படங்கள் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டாடுவார்கள். அப்படி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அஜித் நிகழ்த்திய மிரட்டலான சம்பவம் தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'மங்காத்தா'.
மங்காத்தா ஆட்டம் ஆரம்பித்தது: அப்போதைய காலத்தில் சென்னை 28, சரோஜா போன்ற ஜாலியான படங்களை எடுத்துவந்த இயக்குநர் வெங்கட் பிரபுவை அழைத்து, நாம் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்கிறார் நடிகர் அஜித். இதனையடுத்து வெங்கட் பிரபு ஐபிஎல் சூதாட்ட பணத்தை கொள்ளையடிக்கும் நண்பர்கள் பற்றி ஒரு கதையை சொல்லியுள்ளார்.
இதில் எல்லோரும் வில்லன்கள் ஒருவன் மட்டும் வில்லன்களுக்கே வில்லன் என்று வெங்கட் பிரபு சொன்னதும் அந்த வில்லாதி வில்லனாக நான் நடிக்கிறேன் என்று அஜித் சொன்ன அடுத்த நொடி மங்காத்தா ஆட்டம் ஆரம்பம்மானது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அர்ஜுன், த்ரிஷா என முன்னணி நடிகர்கள் இணைகின்றனர். படத்தை முன்னாள் அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
அஜித்தின் சர்ச்சை பேச்சு: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு "பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா" என்னும் நிகழ்ச்சியில் கருணாநிதி முன்னிலையில் நடிகர் அஜித் பேசியது சர்ச்சையான காலகட்டம் அது. இதனால் படத்திற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தார்.
ஆனால் படம் முடிந்து படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை, அனவரும் ஒருவித தயக்கத்துடன் இருந்தார்கள். காரணம் 'மங்காத்தா' படத்தின் தயாரிப்பாளர் திமுக வாரிசு என்பது தான். இதனால் படம் ரெட் ஜெயன்ட், ஸ்டூடியோ கிரீன் என நிறுவனங்கள் கைமாறியது, ஆனால் எந்தவித பலனும் இல்லை. இந்த செய்தி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காதுக்கு செல்ல, "எந்தவித எதிர்ப்பும் இல்லாத படத்துக்கு ஏன் பிரச்சினை கொடுக்கிறீர்கள்" என அவர் கேட்டதாக அப்போது தகவல் வெளியானது. ஏனென்றால் அப்போதைய முதலமைச்சரின் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர்.
விளம்பரங்களே இல்லாமல் பந்தயம் அடித்த மங்காத்தா: 2011 ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு வெளியாக வேண்டிய படம், சற்று தாமதமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. ஆனால் வெளியாகும் நாள் வரை படத்தின் வெளியீட்டு தேதி குறித்து யாருக்கும் தெரியாத நிலையில் இருந்தது.
திடீரென ரிலீஸ் அறிவிக்கப்பட்டதால், இரவோடு இரவாக புக்கிங் தொடங்கி அடுத்த நாள் படம் வெளியானது. எந்தவித விளம்பரங்களோ, போஸ்டர்களோ எதுவுமின்றி இன்றி திடீரென வெளியானது மங்காத்தா. திரையுலகின் ஒரு முன்னணி நடிகரின் படம் இப்படி எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியான படம் என்றால் அது மங்காத்தாவாகத்தான் இருக்கும்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. நடிகர் அஜித் யார் என்பதை அப்போதுதான் திரையுலகம் கண்டுகொண்டது. படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அஜித்தின் வில்லத்தனம் படம் பார்த்தவர்களை மிரள வைத்தது. பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, அஜித்திக்கு அமைத்த பின்னணி இசை இன்றுவரை அஜிதிற்க்கு சிறந்த இசையாக அமைந்தது.
இன்னும் சொல்வதானால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் மங்காத்தா படத்தில் வரும் அந்த பின்னணி இசை ஒளிக்காத செல்போன்களே இருக்க முடியாது. மேலும் அஜித் என்ற சொல்லை கேட்டாலே மங்காத்தாவின் பின்னணி இசையும், அப்படத்தில் அவர் சிறிக்கும் வில்லத்தனமான சிறிப்பும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
வெங்கட் பிரபுவின் சிறப்பான கேம்: பணத்துக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் கொடூரனாக நடிகர் அஜித், வினாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரம் மூலம் அமர்க்களப்படுத்தினார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அனல் பறந்தன. அஜித் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் மாஸ் காட்சிகளாக செதுக்கி இருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. குறிப்பாக 'மங்காத்தா' படம் வெங்கட் பிரபு திரை வாழ்விலும், நடிகர் அஜித்தின் திரை வாழ்விலும் முக்கியமான படமாக அமைந்தது.
மங்காத்தா அஜித்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கமர்ஷியல் நடிகரின் மைல் கல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக மங்காத்தா படம் அமைந்தது. எந்தவித விளம்பரங்களும் செய்யப்படாத மங்காத்தா படம், 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.
மங்காத்தா 2 எப்போது: நடிகர் அர்ஜூன் மற்றும் அஜித் இணைந்து நடித்த இந்த படம் திரையரங்குகளை தீப்பிடிக்க வைத்தனர். அதன் பிறகு அஜித்திற்கு 'மங்காத்தா' போல மிகப் பெரிய வெற்றி படம் அமையவில்லை என்பதே உண்மை. ரசிகர்கள் இப்போது வரை இயக்குநர் வெங்கட் பிரபுவை பார்த்தால், மங்காத்தா 2 எப்போது என்றுதான் கேட்பார்கள். அந்த அளவிற்கு மங்காத்தா படம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்று மங்காத்தா படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். மேலும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி என்ற படம் உருவாகி வருகிறது. ஆனாலும் ரசிகர்கள் மங்காத்தா 2 எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: Jawan trailer: நா வில்லனா முன்னாடி வந்து நின்னா?.. மெர்சலுடன் வெளியான ஜவான் டிரைலர்!