சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த வியாபாரிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வியாபாரிகளை கைது செய்ய சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட அனைத்து போலீசாருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக அனைத்து மாவட்ட ஏ.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 100க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பல லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வனப்பகுதிகளில் கள்ளச்சாராயம் ஏதும் தயாரிக்கப்படுகிறதா என அங்கு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தின் மூலப்பொருளான மெத்தனால், தொழிற்சாலைகள், மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட சில அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலப்பொருள் வியாபாரிகளுக்கு கிடைப்பது எப்படி? என கண்டறிய விற்பனை செய்யும் கடைகளின் பட்டியலை தயார் செய்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் கள்ளச்சாராய வியாபாரிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் கள்ளச்சாராயம் கொண்டு வராத படி முக்கிய சாலைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீவிர நடவடிக்கையானது அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: TN illicit liquor Raid: கடலூரில் 88 சாராய வியாபாரிகள் கைது!