சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே.8) வெளியாகின. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். 2,767 மேல்பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கின்றனர். மாணவர்கள் பள்ளி வளாகத்தின் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இதில், 17 மாணவ - மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய நிலையில், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
அரசு பார்வையற்றோர் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது, மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: +2 தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி ஸ்ரேயாவுக்கு குவியும் வாழ்த்து!