கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று(மே.8) மாலை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,’முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிப்பதற்காகக் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலிருத்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல வழக்கமாக இயக்கப்படும் 1,650 பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்பட்டன. நாளை(மே.9) வழக்கமான 1,650 பேருந்துகளுடன் 270 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தமிழ்நாட்டின் 8 போக்குவரத்துக் கழகங்களில் இருந்து இன்று ஒட்டுமொத்தமாக 4,820 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
நாளை மாநிலம் முழுவதும் வழக்கமான 3,185 பேருந்துகளுடன், 1,631 பேருந்துகள் இயக்கப்படும். ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் 9,636 பேருந்துகள் இயக்கப்படும். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளுக்கு பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நேரடியாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து இயக்கப்படுகிறது.
தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளே போதிய அளவுக்கு இயக்கப்படுவதால் பொதுமக்கள் தனியார் பேருந்துகளில் பயணிக்கத் தேவையிருக்காது’என்றார்.
இதையும் படிங்க:பேனரை அகற்ற சொன்ன முதலமைச்சர்!