அங்கீகாரம் பெற்ற கல்வி அமைப்பாக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வரையறுத்துள்ள வழிமுறைகளின்படி, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த 2010ஆம் ஆண்டு அறிவித்தது.
அதன்படி, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்திட ஆசிரியர் தேர்வு வாரியம் முகமையாக நியமிக்கப்பட்டு, 12.7.2012,14.10.2012 மற்றும் 17,18.8.2013 ஆகிய தேதிகளில் 3 முறையும், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நான்காவது முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நான்கு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, தமிழக அரசால் வாய்ப்புகள் வழங்கப்பட்டும் ஆயிரத்து 500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாதால், அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அவர்களுக்கு விரைவில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் 10 நாட்கள் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவுரை வழங்கி உள்ளது.
இது குறித்து, மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் உஷாராணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களால் தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கேட்டுள்ளார்.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்ட ஆயிரத்து 500 ஆசிரியர்களில் பயிற்சியில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அவர்களுக்கு முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களைக் கொண்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பத்து நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.