சென்னை: குவைத்திலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் ஆகியவை நேற்று (நவம்பர் 22) சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அதில் வந்த பயணிகளை வழக்கம்போல் சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.
அதில் குவைத்திலிருந்து வந்திருந்த சென்னையைச் சோ்ந்த ஒரு ஆண் பயணியின் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய சோதனையில் மூடியிடப்பட்ட ஒரு பாத்திரத்தின் கைப்பிடிகளில் தங்கக்கட்டிகள் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோன்று இலங்கை விமானத்தில் வந்த சென்னை பயணி மறைத்துவைத்திருந்த தங்க நாணயங்களும் பறிமுதல்செய்யப்பட்டன. மேலும் துபாயிலிருந்து வந்தடைந்த ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமான பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஒரு பயணியிடமிருந்து 125 கிராம் தங்கச் சங்கிலி, ஐ போன்கள், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன. மூன்று விமானங்களிலும் சேர்த்து மொத்தமாக 58.7 லட்சம் ரூபாய் மதிப்பிஸான பொருள்களைப் பறிமுதல்செய்த சுங்கத் துறையினா், கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: NCB Operation: தேங்காய் நாரில் கஞ்சா கடத்தியவர்கள் கைது!