படாளம் காவல் எல்லைக்குட்பட்ட, மாமண்டூர், புக்கத்துறை ஆகிய பகுதிகளில், தொடர்ந்து இருச்சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்த புகார்கள் குவிந்த நிலையில் விசாரணையில் ஈடுபட்ட படாளம் காவல் துறையினர், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
அதனடிப்படையில், சந்தேகத்துக்கிடமான இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில் ஒருவர் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், மற்றொருவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும் தெரியவந்தது. இருவரும் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஒன்பது இருசக்கர வாகனங்ளை மீட்டனர்.